Monday, 12 January 2009

கூவாத கோழிகளும், குடைசாயும் இறையாண்மையும்...!



மனித சமூகத்தின் புராதன வரலாற்றில் கோழிகளுக்கும் முக்கிய இடம் இருந்துள்ளது. இன்றிலிருந்து சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கோழிகளை வீடுகளில் வளர்த்ததாக மானுடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) முன்னொரு காலத்தில் கோலோச்சிய சிந்து சமவெளி நாகரிகத்தின் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கி.மு. 2500 - 2100 ஆண்டுகளில் கோழிகள் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மண்தகடுகள் கிடைத்துள்ளன.

 கூவும் அல்லது கூவாத கோழிக்கும், இறையாண்மைக்கும் என்ன தொடர்பு?
மன்னர்கள் ஆட்சி நடைபெற்ற பண்டைக்காலத்தில் அரசனின் செங்கோலும், வெண் கொற்றக்குடையுமே இறையாண்மையின் அடையாளமாக கருதப்பட்டது. மக்களாட்சி நடைபெறுவதாக கூறப்படும் தற்போதைய காலத்தில், இறையாண்மை என்பது நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசியல் கட்சிக்கு தொடர்புடையதாகவும், எதிரி நாடுகளாலோ, பயங்கரவாதிகளாலோ, அரசை விமர்சிப்பவர்களாலோ பாதிக்கப்படும் ஒரு கருத்தாக்கமாகவே நம்மில் பலரும் கருதுகிறோம். அதாவது அரசு அமைப்பினை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரு அம்சமாகவே இறையாண்மைநமக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நாட்டின் உள்-வெளி விவகாரங்களை தீர்மானிக்கும் அரசு அமைப்புகளின் அதிகாரமே, இறையாண்மை என்று அரசியல் மற்றும் சட்ட தத்துவங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு நாட்டு குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் எந்த அம்சம் குறித்தும் அந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அந்நாட்டு அரசே முடிவெடுக்கும் உரிமையே அந்த அரசின் இறையாண்மை என்று கொள்ளலாம். இந்த இறையாண்மை என்ற கருத்தாக்கம் சாமானிய குடிமக்களுக்கும் பொருந்தும் என்று நவீன மனித உரிமை கருத்தியலாளர்கள் கூறுகின்றனர்.

கோழிகளுக்கும், குடிமக்களின் இறையாண்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?
 நம்மில் பலரும் நாட்டுக்கோழிகளை வளர்த்திருக்கவோ, அண்டை அயலார்கள் வளர்ப்பதை பார்த்திருக்கவோ கூடும். இந்தக் கோழிகளுக்கு மனித குணங்களில் பல குணங்களும் இருக்கும். குறிப்பாக தாய்க்கோழி, அதன் குஞ்சுகளை பருந்து, நாய், சில நேரங்களில் தீய மனிதர்கள் போன்ற எதிரிகளிடம் இருந்து போராடி பாதுகாக்கும் வீரம் செறிந்த செயலை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த கோழிகள் மனிதனை சார்ந்தே வாழ்ந்தாலும், அவற்றுக்கான உணவினை தானே தேடி உண்ணும் இயல்புடையவை. முட்டையிடுவது முதல், அதை அடைகாத்து குஞ்சு பொரிப்பதுடன் அவற்றை பாதுகாத்து, குஞ்சுகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் திறன் படைத்தவை நாட்டுக்கோழிகள்.

மனிதர்களுடன் இந்தக்கோழிகள் கொண்டிருந்த உறவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதை உணர்ந்தால்தான் புரியும். கோழிகளால் பேசமுடியாது என்பதால் சொற்கள் ரீதியான உறவு சாத்தியமில்லையே தவிர நாய்கள், மாடுகளைப்போல இந்தக் கோழிகளும் மனிதர்களோடு மிகச்சிறந்த உறவைக் கொண்டிருந்தன.
குஞ்சுகளோடு தாய்க்கோழி வலம் வரும் காட்சியே தாய்மை உணர்வை எளிய மொழியில் விளக்குவதாக இருக்கும். ஒரே தாய்க்கோழியின் குஞ்சுகளாக இருந்தபோதும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் கோழிக்குஞ்சுகள் நடமாடும் குறுங்கவிதைகளாய் நமது உள்ளத்தைத் தொடும். இந்த கோழிகளில்தான் எத்தனை வகைகள்.

 சாதாரண நாட்டுக்கோழிகள் தவிர கழுத்துப்பகுதியில் இறக்கைகள் இல்லாத கிராப்கோழிகள், காலில் கூட இறகுகள் முளைத்த, கருமையான ரத்தமும் சதையும் கொண்ட கருங்கோழிகள், பாம்பை குரலாலேயே விரட்டக்கூடிய கினிக்கோழிகள் என ஏராளமான கோழிகள். ஆனால் இவற்றில் எந்த ஒரு கோழி இனமும் மற்ற கோழி இனங்களை அழித்து விடவில்லை. ஏனெனில் இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்வகைகளுக்கும் உரிய இடமுண்டு. இதைத்தான் உயிரினப்பரவல் (Bio Diversity) என்று சொல்கிறோம்.
வரலாற்றில் கோழிகள்!
இந்தக்கோழிகள் நமது உணவுத்தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. இவை நமது அன்றாட வாழ்விலும் இடம் பெற்றவை.  அதிகாலையில் கூவி நமது நாளை தொடங்கிவைத்ததே சேவல்கள்தான். இதனால்தான் இந்த சேவலை தமிழர்களின் இறைவனாக கருதப்படும் முருகனின் கொடியில் வைத்து அழகு பார்த்தான் அன்றைய தமிழன். 

மேலும் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய உறையூர், கோழியூர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. மதம் கொண்ட யானையை சேவல் ஒன்று வென்றதாக கூறப்படும் தொன்மக் கதையொன்றின் விளைவாக உறையூருக்கு கோழியூர் என்ற பெயர் வந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் வரும்...
"முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர்"
(247-8)
என்ற பாடல் வரிகளுக்கு
"யானையைக் கோழி முருக்கலால் கோழி என்று பெயராயிற்று;
யானையைச் சயித்த கோழி தோன்றினவிடம் வலியுடைத்தென்று கருதி
அவ்விடத்து அதன் பெயராலே சோழன் ஊர்காண்கின்ற பொழுது
சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறம்பே சிறையையுடைய கோழி
என்றாயிற்று."
- அரும்பதவுரை யாசிரியர்

 "வாரணம் - கோழி; ஆவது உறையூர். முற்காலத்து ஒரு கோழி
யானையைப் போர் தொலைத்தலான் அந் நிலத்திற் செய்த நகர்க்குக்
கோழி என்பது பெயராயிற்று."
- அடியார்க்கு நல்லார்
என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் மனிதனின் முன்னோடியான விலங்கு உணர்வுகளுக்கு தீனிபோடுவதற்காக சேவல் சண்டை என்ற சர்ச்சைக்குரிய பொழுதுபோக்கு அம்சம் புராதன காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் குகை ஓவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வரை பலவாறாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியம் முதல் சமீபத்திய திரைப்பட பாடல்கள்வரை கோழிகள் குறித்து எழுதப்பட்டுள்ள இலக்கிய வரிகள் இந்தக்கோழிகள் நமது வாழ்வில் முக்கிய இடம் வகித்ததை உணர்த்தும். திறந்த வெளியில் சூரியனின் வெப்பத்தில் உலர வைத்திருந்த உணவு தானியங்களை மேய்வதற்கு வந்த கோழிகளை தனது காதுகளில் இருந்த விலை உயர்ந்த கற்கள் பதித்த தங்கத்தோடுகளை கழற்றிவீசி ஓடச்செய்த மூதாட்டியைப்பற்றி சங்க இலக்கிய பாடல் ஒன்றை படித்திருக்கலாம். இந்தப்பாடல், கோழிகள் மனித வாழ்வில் அனைத்து தளங்களிலும் இடம் பெற்றதையும், அதோடு, தமிழர்கள் தங்க ஆபரணங்களைவிட அதிக முக்கியத்துவத்தை தானியங்களுக்கு கொடுத்ததையும் உணர்த்தும்.
காலைப்பொழுதில் கோழியின் கூவல் சத்தத்தில் மக்கள் விழிப்பதை ஆன்மிகப்பாடல்களும், காதல் காவியங்களும் பதிவு செய்துள்ளன. சேர நாட்டுத்தலைநகர் வஞ்சிநகர மக்களும், சோழ நாட்டுத்தலைநகர் உறையூர் வாழ் மக்களும் சேவல் கூவி எழும்போது, பாண்டிய நாட்டு தலைநகரான மதுரை மக்கள் வேதங்கள் ஓதப்படும் ஒலியில் விழித்தெழுவதாக பெருமை பேசுகிறது கீழ்க்கண்ட பரிபாடல்.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.
பரிபாடல்-திரட்டு 8:7-12

காதல் காவியங்களிலும் கோழிகளுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உதாரணத்திற்கு எளிய குறுந்தொகை பாடல் ஒன்றைப் பார்க்கலாம்:
'குக்கூ' என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.
தோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
- அள்ளூர் நன்முல்லை

அதிகாலையில் கோழியின் குரலைக் கேட்டதும் விழித்துக்கொண்ட தலைவி பொழுது விடிந்துவிட்டதே என்று வருத்தப்படுகிறாள். வைகறைப் பொழுது தன்னையும் தன் கணவனையும் பிரிக்கும் வாள்போல் வருகிறது என்று தனது துயரத்தை காவிய நயத்தோடு தலைவி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்தப்பாடல்.

மருத்துவத்துறையில் கோழி!

உலகில் உள்ள பல்வேறு மருத்துவ முறைகளிலும் கோழிகள் மருத்துவ பயன்பாடு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நமது சித்தமருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் கோழிக்கும், கோழி முட்டைக்கும் உள்ள மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

கோழிக்கறி நெருப்பாங் கொள்ளின் மருந்துரம்வால்
கூழைக்கடுப்பு மந்தங் கூரரச மகிழ்ப்பேர்
நீலுற்ற போக நிலக்கிரந்தி பித்தழ ளந்தான்
தூளித்த மெய்யிழைக்குஞ் சொல்.

(கோழிக்கறியானது அதை உட்கொள்வோருக்கு உடல்சூட்டைக் கொடுக்கும். மந்தத்தைப் போக்கும். உடல் இளைக்கச் செய்யும். போகம் விளைவிக்கும்)

வாதபித்தஞ் சேர்ப்பிக்கும் வன்றோடம் புண்போக்குங்
தாதுவை மெத்த தலைப்பிக்கும் மோது
கபத்தை அடக்குங் கரப்பான் உண்டாக்கும்
விபத்தையுறுங்
 கோழிமுட்டை எண்.
(கோழி முட்டையை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண் ஆறும். கபம் கோழையை அகற்றும். கரப்பான் உண்டாக்கும். வாதம், பித்தம் உடலில் அதிகரிக்கும்)

கோழியின் பொருளாதாரம் – கை மாறும் அதிகாரம்!

சாமானியர்களின் உணவாகவும், மருந்தாகவும் மட்டுமல்லாமல் செல்வமாகவும், வளமாகவும்கூட இந்தக் கோழிகள் பார்க்கப்பட்டன.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானவை இந்த கோழிகள் மீதான இறையாண்மை. எந்த வகைக்கோழிகளை வளர்ப்பது, எத்தனை அளவில் வளர்ப்பது, என்ன தீவனம் கொடுத்து எங்கே வளர்ப்பது போன்ற அம்சங்களில் முடிவெடுக்கும் உரிமை மக்களிடமே இருந்தது. இதையே இறையாண்மை என்று கூறுகிறோம். கோழிகளை விவசாயிகள் மட்டுமே வளர்க்கவில்லை. எந்தத் தொழில் செய்பவரும், இல்லத்தரசிகளும், சிறுவர்களும்கூட மேற்கொள்ளும் விதத்திலேயே அன்றைய கோழி வளர்ப்பு இருந்தது. மக்கள் வசிக்கும் இடத்திற்கேற்ப கூடு அமைத்து கோழி வளர்க்கும் வசதியும், வாய்ப்பும் இருந்தது. கோழிகளோ, முட்டைகளோ எளிதில் கிடைப்பதாக இருந்தது. பஞ்சாரம் என்ற பெயரில் மூங்கிலால் அல்லது இரும்பு கம்பிகளால் ஆன கூம்பு வடிவக்கூடைகள் கோழிகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டன.


ஆனால் இந்தியாவில் நிலவிய உணவுத் தட்டுப்பாட்டை நீக்க வந்ததாக கூறப்படும் பசுமைப்புரட்சியின் உடன்பிறப்பாக வந்த வெண்மைப்புரட்சியின் விளைவாக வீரிய ரக கால்நடைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. கூடுதல் பாலுக்காக ஜெர்சி போன்ற உயர் இன(!) பசுக்களோடு, எந்தத் தேவையும் இன்றியே அதிஉயர்(!) இன கோழிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய கோழிவகைகள், இந்திய சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உகந்த அளவில் இல்லை என்று இதுவரை யாரும் கூறியதே இல்லை. எனினும் இந்தியாவில் அயல்நாடுகளிலிருந்து வீரிய இன கால்நடைகள் என்ற பெயரில் எந்த வீரியமும் இல்லாத, உண்மையில் மிகவும் தரம் குறைந்த கோழி இனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் புறக்கணித்துவிட்டு யாராலும் வாழமுடியாது. ஆனால் அந்த அறிவியலும், தொழில்நுட்பமும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; யாருடைய நலன்களுக்காக பயன்பட வேண்டும் என்ற அம்சங்கள் தீவிர பரிசீலனைக்கு உரியவை. அறம் சாரா அறிவியலோ, தொழில்நுட்பமோ மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.

இவ்வாறான அறம் சாராத அறிவியலின் வளர்ச்சி என்ற பெயரில் உயர்-உயிரி தொழில்நுட்பம் என்ற பெயரில் பிராய்லர் எனப்படும் கறிக்கோழிகளும் மற்றும் லேயர் என்ற முட்டைக்கோழிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. குஞ்சு பொரித்து 40-50 நாட்களிலேயே இறைச்சிக்கு தயாராகும் பிராய்லர் கோழிகளும், குஞ்சு பொரித்து 6 மாதங்களில் முட்டையிடத் தொடங்கி ஓராண்டுக்குள் சுமார் 250 முட்டைகளை இட்டு ஓய்ந்துவிடும் லேயர் கோழிகளும் பரவலாக விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

தாய்க்கோழியின் அடைகாப்பில் இயற்கையாக குஞ்சு பொரிப்பதற்கு பதிலாக இன்குபேட்டர் எந்திரங்களின் செயற்கை அடைகாப்பில் பொரிக்கும் இந்தக்கோழி குஞ்சுகளுக்கு தாய்க்கோழிகளையே தெரியாது. கோழிக்கான எந்த உணர்வுகளும் இந்த கோழிக்கு இருக்காது. எனவே இந்த குஞ்சுகள் முட்டையிடும் அல்லது கறிக்கோழியாக உருமாறும் உயிருள்ள எந்திரங்களாகவே வளர்கின்றன.

முன்னர் பல்வேறு வண்ணங்களில் இருந்து வந்த கோழிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெள்ளை வண்ணத்திற்கு மாறின. பண்ணைகளுக்கு வரும் பிராய்லர் கோழிகள் முட்டையிடுவதை மறந்திருந்தன. 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்த கோழிகள், அவை உட்கொள்ளும் உணவை இறைச்சியாக மாற்றாமல் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தின. மேலும் கொழுப்பு அடைத்து மரணத்தை தழுவின. எனவே இந்தக் கோழிகளை சுமார் 55 நாட்களுக்குள், உரிய விலை கிடைக்காவிட்டாலும் விற்றுத்தீர்த்துவிட வேண்டிய கட்டாய சூழலுக்கு கோழிப் பண்ணையாளர்கள் உள்ளானார்கள்.

லேயர் என்ற முட்டைக்கோழிகளோ, தாம் முட்டையிட சேவல் தேவையில்லை என்ற உயிரியல் உண்மையை உணர்த்தின. ஆனால் அதன் விளைவாக அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது என்ற உண்மையும் தெரியவந்தது. அப்போதுதான் அடுத்த முறையும் கோழிக்கு குஞ்சு பொரிப்பகங்களைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற உண்மை கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.
இதைவிட முக்கியமாக இந்தக்கோழிகளுக்கு, பழைய நாட்டுக்கோழிகளைப் போல தீனியைத் தேடும் திறன் கிடையாது. கோழி நிறுவனத்தின் அயல்நாட்டு அதிபர்களும்,அவர்களின் உள்நாட்டு பிரதிநிதிகளும் பரிந்துரை செய்த கோழித்தீவனங்களே இந்தப் பண்ணைக்கோழிகளின் முழுமுதல் உணவானது. இந்த தீவனங்களில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதுகூட பல பண்ணை உரிமையாளர்களுக்குத் தெரியாது.

இவை, கோழியின் உருவத்தில் உள்ள ஒரு ஜந்துவே தவிர, இவற்றை முழுமையான கோழி என ஏற்கமுடியாது. ஏனெனில் இந்தக்கோழிக்கு பறக்கத் தெரியாது. குஞ்சுகளை காப்பாற்றத் தெரியாது. விடியலில் கூவத்தெரியாது. அதற்கான உணவை தேடிப்பெறத் தெரியாது. குஞ்சு பொரித்த நாளிலிருந்து கூண்டிலோ, மிகக்குறைவான இடவசதி கொண்ட பண்ணைகளிலோ வளர்க்கப்படுவதால் இந்தக் கோழிகளுக்கு, நாட்டுக்கோழிகளைப்போல்  நடக்கவும், ஓடவும்கூட தெரியாது.

கோழி: மருந்தா? நோயின் காரணமா?

நாட்டுக்கோழிகள் மருத்துவ குணம் கொண்டவை என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் இந்த பிராய்லர் கோழிகளும், லேயர் இனக்கோழிகள் இடும் முட்டைகளும் மருந்தாக பயன்படவில்லை என்பதோடு பல்வேறு நோய்களுக்கான காரணியாகவும் இருக்கின்றன என்ற திடுக்கிடும் தகவலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நவீன ரகத்தைச் சேர்ந்த இந்தக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு என்பது உலகறிந்த உண்மை. மிகவும் கவனமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படும் பண்ணைகளில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகள் அவ்வப்போது நோய்வாய்ப்பட்டு இறப்பதன் மூலம் கோழிப்பண்ணையாளர்களுக்கு பெருத்த பொருள் இழப்பை ஏற்படுத்துவது இத்துறை சார்ந்த அனைவருக்கும் தெரியும். இந்தக்கோழிகளுக்கு வழங்கப்படும் உணவில் என்ன பொருட்கள் கலந்திருக்கின்றன? இந்த உணவைத் தின்று வளரும் கோழிகளையோ, அவை இடும் முட்டைகளையோ உட்கொள்ளும் நமக்கு என்ன பிரசினைகள் வரும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளோ, தனியார் கோழி நிறுவனங்களோ முன் வருவதே இல்லை.

ஆனால் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்ததாக கூறப்படும் மேற்குலக நாடுகளில் அரசுத் தரப்பிலும், நுகர்வோர் அமைப்புகள் சார்பிலும் இந்த உயர் இன(!)க்கோழிகளால் நுகர்வோர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளில் பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவருகின்றன.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழகத்தின் (Duquesne Universityஉயிர்ம வேதியியல்த்துறை பேராசிரியர் டாக்டர் பார்த்தா பாசு என்பவர் மேற்கொண்ட ஆய்வில் பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்திற்காக அளிக்கப்படும் ரோக்ஸார்சோன் (Roxarsone)  என்ற மருந்து மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்க வல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து பிரபல பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைஸர் (Pfizer)நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


வீரிய ரகமாக கருதப்படும் பிராய்லர் மற்றும் லேயர் கோழியினங்கள் அனைத்தும் மைகோடாக்ஸின் என்று அழைக்கப்படும் பூஞ்சைக்காளானிலிருந்து உருவாகும் ஒருவகையான நச்சு உயிரியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக செர்பியா நாட்டின் கால்நடை மருத்துவத்துறையும், ராணுவ மருத்துவக் கழகத்தின் நச்சு கட்டுபாட்டுத்துறையும் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இந்த நச்சுப்பொருள் காரணமாக மனிதர்களுக்கு தோல்நோய்கள், நுரையீரல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இதேபோல உரிய வயதை அடையாத சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பாலியல் சார்ந்த நோய்களும், மேலும் பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும், லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியா போன்று வளரும் நாடுகள் என்று கூறிக்கொள்ளும் நாடுகளில் இதுபோன்ற நவீன ரக கோழிகளை உட்கொள்வோருக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான விளைவுகள் குறித்து வெளிப்படையான ஆய்வுகள் நடைபெறுவது இல்லை.

பறக்கத் தெரியாத கோழிக்கு சிறகு எதற்கு?

இந்நிலையில் கோழிகளை இறைச்சிக்காக சுத்தம் செய்ய வசதியாக சிறகுகளே இல்லாத கோழிகள் மரபணு மாற்றத்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அடுத்தக் கட்டமாக பறக்கத்தேவையில்லாத கோழிக்கு இறக்கை எதற்கு என்ற நோக்கில் இறக்கை இல்லாமலும், கூண்டில் அல்லது கடையில் அடுக்கிவைப்பதற்கு வசதியாக சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோகூட கோழிகள் அறிமுகமாகலாம். இந்த புதிய இனங்கள், இவற்றை உட்கொள்ளும் மனிதர்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது.

இதேபோல இந்தக்கோழிகளில் எத்தனைக் கோழிகளை வளர்ப்பது என்று முடிவெடுப்பதிலும் சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப்பங்கும் இருப்பதில்லை. அதை குஞ்சுப் பொரிப்பகங்களை நடத்தும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்தக் கோழிகளுக்கு என்ன தீவனம் இடுவது, என்ன மருந்துகளை கொடுப்பது என்பதையும் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன.

ஆக நமது கண் எதிரிலேயே நமக்கு அறிமுகமான நாட்டுக்கோழி என்ற நமது பாரம்பரிய கோழி இனங்கள் மெல்ல அழிந்துவருகின்றன. அதற்கு பதிலாக கோழி உருவம் தாங்கிய ஏதோ ஒன்று கோழி என்ற பெயரில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.


நகர்ப்புறங்களில் வாழும் இளைய தலைமுறைக்கு கோழிகள் முட்டை இடும் என்றோ, இந்த முட்டையிலிருந்துதான் கோழிகள் உருவாகின்றன என்பதோ தெரியாமல் போகலாம். இந்த கோழிகளும், முட்டைகளும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர்கள் எண்ணும் வாய்ப்பும் உள்ளது. கோழியின் பிற குணாதிசயங்களோ, உயிர்ச்சூழலோ அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே போய்விடக்கூடிய ஆபத்தும் உள்ளது.

இதன் அடுத்த கட்டம்...?

பசுமைப்புரட்சியின் உடன்பிறவா சகோதர உறவான வெண்மைப்புரட்சியின் நிலை இதுவென்றால், தற்போது அமல்படுத்தப்படும் என்றென்றும் பசுமைப்புரட்சி” (Evergreen Revolution) மீதமுள்ள இறையாண்மையையும் பலியாக கேட்கிறது.

நேற்று கோழிகளுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை இன்று அரிசி முதலான உணவு தானியங்களுக்கும், ஏனைய காய்கறிகளுக்கும் நிகழ்கிறது. இது எவ்வாறெனில் இந்திய வேளாண்மையில் மரபணு மாற்றம் என்ற தொழில்நுட்பம் வெகு விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள் மனித குலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதில்லை.

மரபணு மாற்றம் என்ற பெயரில் தாவர மரபணுக்களை, விலங்குகளின் மரபணுக்களோடு இணைத்து பல விபரீத சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் வெற்றி அடையும் மரபணுக்கள் அறிவுச்சொத்துரிமை சட்டங்களின்படி காப்புரிமையும் பெற்று வருகின்றன. தற்போதைய இந்திய சட்டப்படி விதைகளுக்கு காப்புரிமை பெற முடியாது என்று கூறப்பட்டாலும், மரபணுவுக்கு பெறப்பட்ட காப்புரிமை மூலமாக விதை மீதான கட்டுப்பாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள் பெற்று வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையான மாற்றியமைக்கப்பட்ட மரபணுவை உடைய தானிய வகைகள் ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டால், அப்பகுதியில் உள்ள அனைத்து விளை நிலங்களிலும் மரபணுமாற்ற தாக்கங்கள் காற்று  மற்றும் பூச்சிகள் போன்ற சிறு உயிரினங்கள் மூலமாக பரவி விடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மரபணு மாற்றக்கூறுகளை அத்துமீறி பரவச்செய்து மற்ற நிலங்களை மாசுபடுத்திய குற்றம் பன்னாட்டு நிறுவனங்கள் மீது சுமத்தப்பட வேண்டும்.

ஆனால் நடைமுறையில் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை செய்துவைத்துள்ள மரபணுக்கூறுகளை, அருகில் உள்ள விவசாயிகள் உரிய அனுமதியின்றி, திருட்டுத்தனமாக பதுக்கி வைத்துள்ளதாக வழக்கு தொடரப்படுகிறது. இவ்வாறான நெறிதவறிய வழக்கில் மான் சான்டோ என்ற பன்னாட்டு பகாசுர நிறுவனத்திற்கு எதிராக போராடி வரும் கனடா நாட்டு விவசாயி பெர்ஸி ஷ்மெய்சர் (http://percyschmeiser.com/) என்பவரின் அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இது போன்ற சட்ட நடைமுறை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அதிக நாட்கள் ஆகப்போவதில்லை. மிக விரைவில் இது போன்ற சட்டங்களால் நம் விவசாயிகளுக்கும் திருட்டுப்பட்டம் சுமத்தப்படலாம்.

விதை போன்ற வேளாண் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப்போக்கு, கோழி விவகாரத்தில் நாம் பார்த்ததைப்போல நம் விவசாயிகளின் இறையாண்மையை பலியாக கேட்கும் ஒரு யுக்தியாகும்.

கோழிகளின் விவகாரத்தில் வீரிய இனம் என்று கூறப்படும் கோழிகள் தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்யும் திறன் அற்றவை. எனவே நமது பாரம்பரிய கோழி இனங்கள் அளவில் குறைந்து வந்தாலும் அவை முற்றிலும் அழிந்துவிடவில்லை. எனவே வீரிய இன பிராய்லர் மற்றும் லேயர் இனக்கோழிகளை வளர்த்து பெரும் இழப்பை சந்தித்த பல கோழிப்பண்ணையாளர்கள் தற்போது தங்கள் பண்ணைகளை நாட்டுக்கோழி பண்ணைகளாக மாற்றியமைத்து பொருள் ஈட்டி வருகின்றனர். எனவே இந்தியக் கோழி இனங்களை அழித்துவிட்டு அந்நிய கோழி இனங்களை மட்டுமே இந்தியர்களுக்கு உணவாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சதித்திட்டம் முழுமையாக வெற்றி அடையவில்லை.

ஆனால் தாவரங்களில் நடக்கும் மரபணு மாற்றம் நம் விருப்பு-வெறுப்புகளை பொருட்படுத்தாது காற்றின் மூலமும், பூச்சி போன்ற சிறு உயிரிகளின் மூலமாகவும் அருகிலுள்ள நிலங்களிலும் பரவி விடும்.  எனவே உணவுப் பொருட்களில் மரபணு மாற்றத்தை ஒருமுறை அனுமதித்துவிட்டால் பின் அது நமக்கு தீமையை மட்டுமே விளைவிக்கும் என்ற உண்மையை உணர்ந்தாலும்கூட அதிலிருந்து பின்வாங்க முடியாது.

தாவரங்களில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய தீயவிளைவுகள் குறித்து சூழலியல் ஆர்வலர்கள் முன்வைக்கும் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்யும் மத்திய அரசு, மரபணு மாற்றத்தை அமல்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான சட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் இந்த சதிகார சட்டங்களை உரிய முறையில் ஆராயாமல் மாநில சுயாட்சி பேசிய திராவிடக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இது அக்கட்சிகளின் சுயநலப்போக்கையும், மக்கள் விரோத போக்கையும் அம்பலப்படுத்துகிறது.

வேளாண்துறையில் மரபணு மாற்றத்தை அனுமதித்தால் நம் நாட்டில் நெல்லை விளைவிப்பதா? அல்லது குதிரைகள் சாப்பிடும் கொள்ளுப் பயிரை விளைவிப்பதா? என்பதை விவசாயிகளோ, மத்திய – மாநில அரசுகளோ தீர்மானிக்க முடியாது. அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் விதைகளை கட்டுப்படுத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களே அவற்றை தீர்மானிக்கும்.

மரபணு மாற்று விதைகளை விற்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்கின்றன. எனவே மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது மருந்துகள் விற்பனையை பெருக்கும் நோக்கில், நோயை அதிகரிக்கும் ஒரு விற்பனைத் தந்திரமாகமாகவும் இருக்கக்கூடும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலோ, இங்குள்ள அரசுகளை தீவிரமாக விமரிசனம் செய்தாலோ இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்திய அரசோ, சட்டப்பூர்வமாகவே அரசின் இறையாண்மையையும், குடிமக்களின் இறையாண்மையையும் தள்ளுபடி விலையில் விற்றுக்கொண்டிருக்கிறது.

இறையாண்மை என்பது அரசு அமைப்புகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; அது சாமானிய குடிமக்களுக்கும் சொந்தமானது என்று நவீன மனித உரிமை தத்துவங்கள் கூறுகின்றன. மக்களின் இறையாண்மையை பாதுகாக்க அரசு தவறும்போது, அதை பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. அந்த இறையாண்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி. இதற்கான பதிலை அரசியல்வாதிகளிடமும், அறிவியல் அறிஞர்களிடமும் கேட்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து விட்டோம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே இப்போதைக்கு முக்கியமானது.



16 comments:

  1. பெயரில்லா4 January 2009 at 21:50

    Vannakam Sri

    what a brief explain with example of Kozhi to Irriammai.

    In this issue I known many new things both Kozhi and Irriammai

    Thank you for your post

    ambudan
    puduvai siva..

    ReplyDelete
  2. பெயரில்லா4 January 2009 at 22:15

    சிறந்த பதிவு,

    தமிழர்கள் ஆட்சியாளர்களையோ, பெரிய அரசியல் கட்சிகளையோ நம்பி மோசம்போனது போதும்.

    தமிழர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்போது தன்னளவில் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்க தொடங்கவேண்டும்.

    இல்லையென்றால், அமெரிக்காவில் செவ்விந்தியனுக்கு என்ன கதியோ அதுதான் இந்தியாவல் தமினுக்கு ஏற்படும்...

    தமிழர்களே! சிந்திப்போம் செயல்படுவோம்...

    ReplyDelete
  3. பெயரில்லா5 January 2009 at 03:31

    மிகவும் நல்ல பதிவு. ஆனாலும் ரொம்ப நீளம். ஆவ்வ்வ்வ்... :)

    ReplyDelete
  4. Dear Anna, its a simple and super article

    ReplyDelete
  5. பெயரில்லா5 January 2009 at 08:25

    hi,

    sxy post.do It would be a great service if u cud provide the contents in english as well.

    ReplyDelete
  6. பெயரில்லா5 January 2009 at 21:41

    மிகவும் நல்ல பதிவு. ஆனாலும் ரொம்ப நீளம். ஆவ்வ்வ்வ்... :)

    ...Me too

    ReplyDelete
  7. பெயரில்லா6 January 2009 at 01:10

    This article is very informative and an eye-opener to the imminent menace to our ecosystem.

    But the article is very lengthy. Pls. provide an abridged version, which can get a wider reach.

    - Deepa Rajan

    ReplyDelete
  8. தெய்வமே..

    காலை நீட்டுங்க.. கும்பி்ட்டுக்குறேன்.. குழம்பு செஞ்சு வைச்சா வயிறு வலிக்கிறவரைக்கும் தின்னுதான் பழக்கம். இம்புட்டு கதையையும் இன்னிக்குத்தான் படிக்கிறேன்..

    மக்களுக்கான வலைப்பதிவு உங்களுடையதுதான் சாமி..

    (சாமி என்கிற வார்த்தை இங்கே ஏற்புடையதா..? தெரியவில்லை.)

    ReplyDelete
  9. பெயரில்லா6 January 2009 at 05:31

    நல்ல பதிவுதான். ஆனால் கோழிகளின் வகைகளை குறிப்பிடுவதில் சில குழப்பங்கள் நேர்ந்துள்ளன.
    அவற்றின் அறிவியல் பெயர்களையும் எழுதியிருந்தால் இந்த குழப்பமும் தீர்ந்திருக்கும்.

    எனினும் மிகநல்ல பதிவே. நன்றி.
    (மின்னஞ்சல் பதிவு செய்வதில் பிரசினைகள் உள்ளதுபோல் தெரிகிறது. எனவே எனது மின்னஞ்சலை நீங்களே பதிவு செய்துவிடுங்கள்.)

    ReplyDelete
  10. பெயரில்லா6 January 2009 at 23:19

    ippadi serious pathivu ezudhina yarum padikka mattanga.

    ithu mokkai ulgam.

    ReplyDelete
  11. பெயரில்லா7 January 2009 at 03:25

    அட! கோழி முட்டைக்குள் இப்படியெல்லாம் சமாச்சாரம் இருக்கா?

    புள்ளிராஜா

    ReplyDelete
  12. பெயரில்லா15 January 2009 at 03:30

    //சிந்து வெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 ஆண்டுகளில் கோழிகள் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மண்தகடுகள் கிடைத்துள்ளன.//

    இந்தச் செய்தியை எந்தப் புத்தகத்தில் படித்தீர்கள்?
    விவரம் தரமுடியுமா.

    நன்றி,
    நா. கணேசன்
    naa.ganesan@gmail.com

    ReplyDelete
  13. //நா. கணேசன் சொன்னது…
    //சிந்து வெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 ஆண்டுகளில் கோழிகள் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மண்தகடுகள் கிடைத்துள்ளன.//

    இந்தச் செய்தியை எந்தப் புத்தகத்தில் படித்தீர்கள்?
    விவரம் தரமுடியுமா.//

    நீங்கள் கேட்ட தகவல் தமிழ் விக்கிபீடியாவில் கோழிவளர்ப்பு என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டு்ள்ளது.

    ReplyDelete
  14. பெயரில்லா1 March 2009 at 20:50

    முதலாளித்துவ சுழ்நிலையில் கோழிகள் மட்டும் இல்லை தாய் பாலும் இனி மார்பில் இருந்து கிடைக்காது ,கோழி, மாடு,நாய் ,இப்போது கத்திரிக்கையும்,தக்காளியும் ,
    நல்ல ஒரு பதிவு, வித்தியாசமான சிந்தனை , வாழ்த்துகள் .

    ReplyDelete
  15. பெயரில்லா21 July 2009 at 08:30

    நல்ல கருத்தாக்கம்.

    "வேளாண் விஞ்ஞானி" என்று அனைவராலும் போற்றப்படும் திருவாளர் சாமிநாதன் போன்றவர்கள் உள்ளவரை நிலைமை தொடரும் ; இல்லை இல்லை நாம் அந்த கருங்காளிகளுக்கு இடம் கொடுக்கும் வரை தொடரும்.

    ReplyDelete
  16. ரொம்ப நல்ல கட்டுரை. நல்ல சிந்தனை. இத்தகைய ஆய்வு சார் பார்வைகள் பொதுத்தளத்தில் முன்வைக்கப்படுவதே ஊடகப் பணியாகும். மிக்க நன்றி உங்களுக்கு.

    அன்புடன், கருணாகரன்

    ReplyDelete

கொரோனா தடுப்பு மருந்து – காப்புரிமை என்ற மரண வணிகம்

  உலகத்தின் வல்லரசு நாடுகளையே மிரட்டிவரும் கொரோனா வைரஸுக்கு எதிராக சுமார் 10 தடுப்பு மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் பல தடுப்பு மருந்த...